search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலை கிராம மக்கள்"

    கொடைக்கானலில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இன்னும் மின்சார வசதியின்றி தவித்து வருகின்றன. #GajaCyclone #Gaja
    கொடைக்கானல்:

    தமிழகத்தை உலுக்கிய கஜா புயல் திண்டுக்கல் மாவட்டத்தையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை புயல் என்றால் என்ன என்று தெரியாத கொடைக்கானலில் ஆக்ரோ‌ஷமாக வீசிய கஜா புயல் மரங்கள், மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள், வீடுகள் அகியவற்றை கடுமையாக தாக்கின.

    இதனால் கொடைக்கானல் நகரிலும் மலை கிராமங்களிலும் மரங்கள் முறிந்து கடந்த 16-ந் தேதி முதல் மின் வினியோம் பாதிக்கப்பட்டது. பல கிராமங்களில் முறிந்து விழுந்த மரங்களும் மின் கம்பங்களும் அகற்றப்படாமல் உள்ளது. முதல் கட்ட பணியாக புயலால் சேதமடைந்த கொடைக்கானல், வத்தலக்குண்டு சாலையிலும், பழனி- கொடைக்கானல் சாலையிலும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நேற்று முதல் போக்குவரத்து தொடங்கியது.

    கொடைக்கானல் மேல்மலை பகுதியான மன்னவனூர், பூண்டி, கிளாவரை, வடகவுஞ்சி, கூம்பூர், கீழ் மலை பகுதிகளான தாண்டிக்குடி, பெரும்பாறை, கே.சி.பட்டி, மங்களம் கொம்பு, மஞ்சள்பரப்பு, தடியன்குடிசை உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்னும் மின் வினியோகம் வரவில்லை. இதனால் அவர்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இரவு நேரங்களில் தூக்கமின்றி தவித்து வருகின்றனர்.

    புயல் மழை காரணமாக பூண்டியில் ஏரி பள்ளம் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பள்ளங்கி, கோம்பை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த 50 ஏக்கர் உருளைக்கிழங்கு, கேரட் போன்ற காய்கறிகள் தண்ணீரில் மூழ்கியது.

    மேலும் கும்பூருக்கு வரும் பிரதான கால்வாய் உடைப்பு ஏற்பட்டதால் பாதை துண்டிக்கப்பட்டது. கொடைக்கானலில் இது வரை இல்லாத அளவுக்கு கஜா புயல் பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கொடைக்கானல் பகுதியில் தாசில்தார் தலைமையில் ஒரு சில அதிகாரிகளே ஆய்வு பணி நடத்தி வருகின்றனர். முழுமையான ஆய்வு நடத்த இன்னும் பல நாட்கள் ஆகும் என விவசாயிகள தெரிவித்துள்ளனர்.

    நகர் பகுதியில் விழுந்த மரங்கள் மட்டும் அகற்றப்பட்டுள்ளது. 38 கி.மீ தூரம் உள்ள சாலை சேதடைந்துள்ளது. மேலும் 12 சிறிய பாலங்கள், 10-க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய்கள், 264 மின விளக்குகள், 2 பெரிய கட்டிடங்கள் சேதமடைந்துள்ன.

    மலை கிராமங்களில் 80-க்கு மேற்பட்ட வீடுகள் இடிந்து உள்ளன. வீடுகளை இழந்த மலை கிராம மக்கள் சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் அரிசி மற்றும் உணவு தானியங்கள் வழங்கியுள்ளனர். அவர்கள் தாங்களாகவே அங்கு உணவு சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். இது தவிர கால்நடைகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு கிடைக்குமா? என்ற ஏக்கத்தில் விவசாயிகள் உள்ளனர். புயல் ஓய்ந்து சீரமைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் மீண்டும் மழை மிரட்டி வருவது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. #GajaCyclone #Gaja
    ×